உலக கோப்பை தொடரில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா 2 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலி உடன் கே.எல். ராகுல் ஜோடி சேர்ந்தார்.
விராட் கோலி 12 ரன்கள் எடுத்திருக்கும்போது, ஹேசில்வுட் பந்தை தூக்கி அடிக்க முயற்சி செய்தார். அப்போது பந்து எட்ஜ் ஆகி மேலே எழும்பியது. எளிதாக வந்த கேட்சை, மிட்செல் மார்ஷ் பிடிக்க தவறினார். இதனால் விராட் கோலி 12 ரன்னில் இருந்து தப்பித்தார். பின்னர் அபாரமாக விளையாடி 116 பந்தில் 85 ரன்கள் சேர்த்தார். இவரது சிறப்பான ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்றது. மேலும், விராட் கோலி இரண்டு சாதனைகளை பதிவு செய்துள்ளார்.
நேற்றைய போட்டியுடன் 64 இன்னிங்சில் (ஒருநாள் மற்றும் டி20) 2785 ரன்கள் அடித்துள்ளார். இதன்மூலம் ஐசிசி தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 2719 ரன்களும், ரோகித் சர்மா 2422 ரன்களும், யுவராஜ் சிங் 1707 ரன்களும், கங்குலி 1671 ரன்களும் அடித்துள்ளனர்.
மேலும், தொடக்க வீரராக களம் இறங்காமல் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 113 முறை விராட் கோலி 50 ரன்களை தாண்டியுள்ளார். சங்ககாரா 112 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். ரிக்கி பாண்டிங் 109 முறையும், கல்லிஸ் 102 முறையும் 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். ரிக்கி பாண்டிங் 109 முறையும், கல்லிஸ் 102 முறையும் 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர்.