ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது.
31 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா பாலோ-ஆன் ஆனாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 322 ரன்கள் முன்னிலைப் பெற்ற இந்தியா, பாலோ-ஆன் வழங்கியது. இதனால் ஆஸ்திரேலியா தொடர்ந்து 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது.
நேற்று 4-வது நாள் ஆட்டத்தின் போது, 2-வது செசனில் தேனீர் இடைவேளைக்குப்பிறகு போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருக்கும்போது போட்டி நிறுத்தப்பட்டது. அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.
கடைசி நாளான இன்றும் காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வந்தது. உணவு இடைவேளைக்குப் பிறகு போட்டி மீண்டும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மைதானத்தை சோதித்த நடுவர்கள் போட்டி கைவிடப்படுவதாக அறிவித்தனர். இதையடுத்து கடைசி டெஸ்ட் டிராவில் முடிந்தது.
இதன்மூலம் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த இந்திய அணி தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. 72 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசி டெஸ்டில் ஆட்ட நாயகனாகவும், இந்த டெஸ்ட் தொடரின், தொடர் நாயகனாகவும் சத்தீஸ்வர் புஜாரா தேர்வு செய்யப்பட்டார்.