தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தது. 3-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா தொடக்கத்தில் நிதானமாக ஆடியது. வான்டெர் டுசன் அரை சதமடித்து 62 ரன்னில் அவுட்டானார். அப்போது 34.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்திருந்தது.
ஒருபுறம் ஹென்ரிச் கிளாசென் அதிரடியாக ஆடி பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட அவர் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். அதன்பின், ஹென்ரிச் கிளாசனுடன் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். இருவரும் ரன்களை குவித்தனர். தொடர்ந்து சிக்ஸர் மழை பொழிந்த கிளாசென் சதம் கடந்து அசத்தினார். மறுபுறம் மில்லர் அதிரடி காட்டி அரைசதம் அடித்தார்.
5-வது விக்கெட்டுக்கு கிளாசன், மில்லர் ஜோடி 94 பந்துகளில் 222 ரன்கள் குவித்து அசத்தியது. இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 416 ரன்கள் குவித்தது. கிளாசென் 83 பந்துகளில் 13 பவுண்டரி, 13 சிக்சர் உள்பட 174 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் 45 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்சர் உள்பட 82 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 417 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி மட்டும் பொறுப்புடன் ஆடினார். சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 99 ரன்னில் அவுட்டானார். டிம் டேவிட் 35 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 34.5 ஓவரில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடர் 2-2 என சமனிலை வகிக்கிறது. தென் ஆப்பிரிக்க சார்பில் நிகிடி 4 விக்கெட்டும், ரபாடா 3 விக்கெட்டும் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருது கிளாசனுக்கு வழங்கப்பட்டது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜோகனஸ்பெர்கில் நாளை நடைபெறுகிறது.