Tamilவிளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டி – தென் ஆப்பிரிக்கா வெற்றி

தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா ஆரம்பம் முதலே ரன்களை குவித்தது. இதனால் அந்த அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 338 ரன்கள் குவித்தது. மார்கரம் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார். மார்க்ரம் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டி காக் 82 ரன்னும், பவுமா 57 ரன்னும் எடுத்தனர்.

இதையடுத்து, 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் மட்டும் அரை சதமடித்து 78 ரன்னில் அவுட்டானார். டிராவிஸ் ஹெட் 38 ரன்னும், மிட்செல் மார்ஷ் 29 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 34.3 ஓவரில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது. தென் ஆப்பிரிக்க சார்பில் ஜெரால்டு கொயட்சி 4 விக்கெட்டும், சம்ஷி, மகராஜ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருது மார்க்ரமுக்கு வழங்கப்பட்டது.