Tamilவிளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் – இந்திய அணியில் இருந்து கே.எல்.ராகுல் விலகல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் கடந்த 1-ந்தேதி நடந்த பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தின் போது காயமடைந்தார். ‘ஸ்கேன்’ பரிசோதனையில் தசைநார் கிழிந்திருப்பது தெரியவந்ததால் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எஞ்சிய போட்டிகளில் இருந்து ஒதுங்கினார்.

அடுத்த மாதம் (ஜூன்) 7ம் தேதி லண்டன் ஓவலில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் லோகேஷ் ராகுல் இடம் பெற்றிருந்தார். இந்த நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இருந்தும் ராகுல் விலகினார்.

இது தொடர்பாக ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட முடியாமல் போவது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. மீண்டும் அணிக்கு திரும்பி வெற்றிக்கு உதவுவதற்கான எல்லாவற்றையும் செய்வேன். அது தான் எனது இலக்கு.

எனது காயத்தின் தன்மை குறித்து கவனமாக பரிசீலித்த மருத்துவ குழுவினர், தொடையில் ஏற்பட்ட காயத்துக்கு விரைவில் ஆபரேஷன் செய்வதே சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். ஆபரேஷனுக்கு பிறகு அதில் இருந்து மீள்வதற்கான பயிற்சியை விரைவில் தொடங்குவேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.