Tamilவிளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி – தொடர்ந்து 4வது முறையாக பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றது இந்தியா

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 571 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. நிதானமாக ஆடிய விராட் கோலி 186 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் 128 ரன்னும், அக்ஷர் படேல் 79 ரன்னும், கே.எஸ்.பரத் 44 ரன்னும் எடுத்தனர்.

91 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா அணி நேற்றைய 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 3 ரன் எடுத்திருந்தது. டிராவிஸ் ஹெட் 3 ரன்னுடனும் குனேமேன் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடியை டிராவிஸ் ஹெட் 90 ரன்கள் விளாசினார். லபுசங்கே 63 ரன்களுடன் களத்தில் இருந்தார். நேற்று பிற்பகல் வரை தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டியை அத்துடன் முடித்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. இதனால் போட்டி டிரா ஆனது.

ஏற்கனவே இந்தியா 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்ததால், 2-1 என தொடரை வென்றது. இதன்மூலம் இந்தியா தொடர்ந்து நான்கு முறை பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.