ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது.
இந்நிலையில், இலங்கை, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 47.4 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 220 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
இலங்கை அணியில் குசால் மெண்டிஸ் 36 ரன், தனஞ்செய டி சில்வா, ஷனகா தலா 34 ரன்கள் எடுத்தனர். அதன்பின், மழை நின்ற பின்னர் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆஸ்திரேலிய அணிக்கு 43 ஓவர்களில் 216 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், ஆஸ்திரேலிய அணி 37.1 ஓவரில் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டேவிட் வார்னர் 37 ரன்கள் எடுத்தார். இதனால் இலங்கை அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் 1-1 என சமனிலையில் உள்ளது. இலங்கை சார்பில் சமீகா கருணரத்னே 3 விக்கெட், துஷ்மந்தா சமீரா, தனஞ்செய டி சில்வா, துனித் வெல்லலகே தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.