இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டி தொடரில் செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 113 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இதனால் 3 போட்டி கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 11-ந் தேதி கேப்டவுனில் தொடங்குகிறது.
2-வது டெஸ்ட் போட்டியில் முதுகுவலி காரணமாக கேப்டன் விராட் கோலி ஆடவில்லை. இதனால் லோகேஷ் ராகுல் கேப்டனாக பணியாற்றினார்.
இந்த நிலையில் 2-வது டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுல் செய்த தவறால் தோல்வி ஏற்பட்டுள்ளதாக முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
விராட் கோலி விளையாடாத டெஸ்டில் இந்திய அணி முதல் முறையாக தோற்றது. கே.எல்.ராகுலை பற்றி சொல்லவேண்டும் என்றால் டீன் எல்கரின் இன்னிங்சில் அவருக்கு தொடக்கத்தில் சுலபமாக ஒரு ரன்னை பலமுறை எடுக்க உதவினார். இதனால் எல்கருக்கு விளையாடுவது எளிதாக இருந்தது.
‘ஹூக் ஷாட்’டை எல்கர் அவ்வளவாக ஆட மாட்டார். அதனால் எல்லைக் கோட் டுக்கு அருகே 2 பீல்டர்களை நிற்க வைத்ததில் அர்த்தம் இல்லை. இதனால் ஒரு ரன்னை அடிக்கடி எடுத்து நிறைய ரன்னை அவர் ஸ்கோர் செய்தார்.
இந்தியா தோற்றது என்பதைவிட 2-வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற்றது என்பதே சரியாகும்.
ரகானேவும், புஜாராவும் அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை நிரூபித்து விட்டார்கள். இருவருக்கும் அணி நிர்வாகம் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. அதற்கு காரணம் அவர்களது அனுபவம்தான்.
கடந்த காலங்களில் அவர்களின் சிறந்த பேட்டிங் பங்களிப்புதான் காரணமாகும். நீண்ட காலமாக இந்த இரு சீனியர் வீரர்களும் நன்றாகவே ஆடுகிறார்கள். அதனால் அவர்கள் மீது தொடர்ந்து நம்பிக்கை வைக்க வேண்டும்.
இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.