ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது. மேத்யூ வடே 53 பந்தில் 80 ரன்களும், மேக்ஸ்வெல் 36 பந்தில் 54 ரன்களும் அடித்தனர்.
பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர் கேஎல் ராகுல் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.
அடுத்து தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தர். தவான் – கோலி ஜோடி 8.5 ஓவரில் 74 ரன்கள் குவித்தது.
அதன்பின் வந்த சஞ்சு சாம்சன் (10), ஷ்ரேயாஸ் அய்யர் (0) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 41 பந்தில் 50 ரன்கள் அடித்தார். கடைசி நான்கு ஓவரில் இந்திய அணி வெற்றிக்கு 56 ரன்கள் தேவைப்பட்டது. விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா களத்தில் இருந்ததால் எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
18-வது ஓவரை ஆடம் ஜம்பா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழந்தார். அவர் 13 பந்தில் 20 ரன்கள் எடுத்து வெளியேறியதும் இந்தியாவின் தோல்வி உறுதியானது. அடுத்த ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி ஆட்டமிழந்தார். அவர் 61 பந்தில் 85 ரன்கள் அடித்தார். இதனால் இந்திய அணியால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களே அடிக்க முடிந்தது.
இதனால் கடைசி போட்டியில் ஆஸ்திரேலியா 12 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதால் இந்தியா தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.