இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர். 20 வருடத்திற்கு மேலான அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஏராளமான வெற்றித் தோல்விகளை சந்தித்து இருப்பார். ஏராளமான தொடர்களை இவர் விளையாடிய காலத்தில் இந்தியா வென்றிருக்கும்.
ஆனால் 2001-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2-1 என டெஸ்ட் தொடரை கைப்பற்றியதுதான் அவருடைய வாழ்க்கையில் சிறந்த டெஸ்ட் தொடர் என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் வாக், இதுதான் இந்திய மண்ணில் கடைசி டெஸ்ட் தொடர் எனத் அறிவித்திருந்தார். இதனால் அந்தத் தொடர் சொந்த மண்ணில் விளையாடிய எங்களுக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு ஆஸ்திரேலியாவுக்கு முக்கியமானது இருந்தது.
மும்பையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின் கொல்கத்தாவில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் ஒரு கட்டத்தில் நாங்கள் பின்தங்கியிருந்தோம். லக்ஷ்மண், டிராவிட் ஆகியோரின் அற்புதமான ஆட்டத்தால் நாங்கள் வெற்றி பெற்றோம். அதன்பின் சென்னையில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் வென்று தொடரை 2-1 என கைப்பற்றினோம். என்னுடைய வாழ்க்கையில் இதுதான் சிறந்த தொடர் என்பதை எந்த சந்தேகமும் இன்றி கூறுவேன்’’ என்றார்.