X

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி – இங்கிலாந்து வெற்றி

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலியா அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது.

முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்துயது ஆஸ்திரேலியா.

இந்நிலையில், இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து, இங்கிலாந்து அணி களமிரங்கியது. அந்த அணியில் எந்த வீரரும் நிலைத்து நின்று ஆடவில்லை.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. ஜோ ரூட் 39 ரன், மார்கன் 42 ரன், டாம் கரன் 37 ரன் மற்றும் அடில் ரஷீத் 35 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியா சார்பில் சம்பா 3 விக்கெட், ஸ்டார்க் 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 73 ரன்னில் அவுட்டானார். அரை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லாபஸ்சாக்னே 48 ரன்னில் வெளியேறினார். அலெக்ஸ் கேரி 36 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் விரைவில் வெளியேறினர்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து, ஒருநாள் தொடரை1-1 என சமன் செய்துள்ளது.

இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர், வோக்ஸ், சாம் கரன் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக ஜோப்ரா ஆர்ச்சர் தேர்வு செய்யப்பட்டார்.