ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வி இந்தியாவுக்கான எச்சரிக்கை – ராகுல் டிராவில் கருத்து
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பையை இந்தியா எளிதாக வெல்லும் என்று கருதப்பட்டது.
ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-3 என இழந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்தத் தோல்வி இந்திய அணிக்கு சீர்தூக்கிப் பார்க்க சரியான நேரம் என்று கிரிக்கெட் விமசகர்கள் கூறி வருகின்றனர்
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வி உலகக்கோப்பைக்கான எச்சரிக்கை அடையாளம் என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
ராகுல் டிராவிட் இதுகுறித்து கூறுகையில் ‘‘நாம் இங்கிலாந்து சென்று உலகக்கோப்பையை எளிதாக வென்று விடுவோம் என்ற கருத்து நிலவியதாக நினைக்கிறேன். ஆகவே, தற்போது நடந்தது நல்ல விஷயம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வி நமக்கு எதை ஞாபகம் படுத்துகிறது என்றால், நாம் மிகமிக சிறப்பாக விளையாட வேண்டும் என்பதுதான்.
கடந்த இரண்டு வருடங்களாக இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. நாம் நம்பர் ஒன் அணியாக இருந்ததால், இங்கிலாந்து சென்று எளிதாக இந்தியா கோப்பையை வென்றுவிடும் என்ற பேச்சு இருந்து கொண்டே வந்தது.
ஆனால் இந்தத் தொடரை பார்த்தவரைக்கும், விசித்திரமாக ஏதாவது நடந்து என்று நான் பார்க்கவில்லை. தற்போது வரைக்கும் நாம் கோப்பையை வெல்லும் ஒரு அணியாகத்தான் சென்று கொண்டிருக்கிறோம். ஆனால், அந்த இலக்கு மிகவும் கடினமாக இருக்கும். மிகவும் போட்டி நிறைந்ததாக இருக்கும்.
எல்லோரும் வேலைப்பளு குறித்து பேசுகிறார்கள். ஒவ்வொரு வீரர்களுக்கும் அவர்களுடைய உடலை எப்படி கையாள வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். வீரர்கள் அந்த நிலைக்குச் செல்வார்கள் என்று நான் நினைக்கவில்லை.
ஆஸ்திரேலியாவின் வேகபந்து வீச்சாளரான பேட்ரிக் கம்மின்ஸ் ‘‘ஓய்வு எடுத்துக் கொண்டு அதற்குப்பின் அணிக்கு திரும்பி பந்து வீசுவதைவிட, தொடர்ந்து பந்து வீசினால்தான் சிறப்பாக பந்து வீசுவதாக உணர்கிறேன்’’ என்று கூறியதாக படித்துள்ளேன்’’ என்றார்.