ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 – இந்தியா தோல்வியடைந்து தொடரை இழந்தது
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றுள்ளதால், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், லோகேஷ் ராகுலும் களமிறங்கினர்.
இருவரும் அடித்து விளையாடியதால் இந்தியா பவர் பிளே-யான முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் சேர்த்தது.
கேஎல் ராகுல் 26 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 47 ரன்கள் சேர்த்து அவுட்டானார். தவான் 24 பந்தில் 14 ரன்கள் சேர்த்து வெளியேறினார். ரிஷப் பந்த் 1 ரன் எடுத்த நிலையில் ஏமாற்றம் அளித்தார். இதனால் இந்தியா 11 ஓவரில் 74 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது.
4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் டோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடனும், அதிரடியாகவும் ஆடியது. இதனால் ரன்கள் உயர்ந்தன. இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 50 பந்தில் 100 ரன்கள் குவித்தது. டோனி 23 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 40 ரன்கள் சேர்த்து வெளியேறினார். விராட் கோலி அதிரடியாக ஆடி அரை சதமடித்தார்.
இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது. விராட் கோலி 38 பந்தில் 2 பவுண்டரி, 6 சிக்சருடன் 72 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 3 பந்தில் 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆர்கி ஷாக்கும், மார்கஸ் ஸ்டோனிசும் இறங்கினர்.
ஸ்டோனிஸ் 7 ரன்னிலும், ஆரோன் பின்ச் 8 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர். அடுத்து இறங்கிய அனுபவ வீரர் மேக்ஸ்வெல் ஷாக்குடன் இணைந்தார். இருவரும் பவுண்டரி, சிக்சராக விளாசினர்.
இதனால், முதல் 10 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்தது. 73 ரன்கள் சேர்த்த நிலையில் ஷாக் 40 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய ஹேண்ட்ஸ்கோம்ப் மேக்ஸ்வெல்லுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். மேக்ஸ்வெல் கிடைத்த பந்துகளை பவுண்டரி, சிக்சர்களுக்கு பறக்கவிட்டார். சிறப்பாக ஆடிய மேக்ஸ்வெல் சதமடித்து அசத்தினார். அவர் 113 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.
இறுதியில், ஆஸ்திரேலியா அணி 19.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதையடுத்து, டி20 தொடரை ஆஸ்திரேலியா 2-0 என கைப்பற்றியது.