X

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டி – புதிய சாதனை படைக்கும் வாய்ப்பில் இந்திய வீரர்கள்

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.

விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இதற்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி விராட்கோலி தலைமையிலான இந்திய அணிக்கு உள்ளது. ஏனென்றால் தோற்றால் தொடரை இழந்துவிடும். அதே நேரத்தில் ஆரோன்பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா இன்றைய ஆட்டத்திலும் வென்று தொடரை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது.

இன்றைய ஆட்டத்தில் வேகப்பந்து வீரர் ஜஸ்பிரித் பும்ரா, தொடக்க வீரர் ரோகித் சர்மா புதிய சாதனை படைக்க வாய்ப்பு இருக்கிறது.

பும்ரா கடந்த ஆட்டத்தில் 16 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் அவர் 50-வது விக்கெட்டை தொட்டு 2-வது இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

பெங்களூர் போட்டியில் பும்ரா 2 விக்கெட் கைப்பற்றினால் 20 ஓவர் சர்வதேச ஆட்டத்தில் அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். அஸ்வின் 46 ஆட்டத்தில் 52 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். பும்ரா 41 ஆட்டத்தில் 51 விக்கெட் கைப்பற்றி அதற்கு அடுத்த நிலையில் உள்ளார்.

ரோகித் சர்மா 94 ஆட்டத்தில் 102 சிக்சர்கள் அடித்து சர்வதேச அளவில் 2-வது இடத்தில் உள்ளார். கிறிஸ்கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்), மார்டின் குப்தில் (நியூசிலாந்து) தலா 103 சிக்சர்களுடன் முதல் இடத்தில் உள்ளனர்.

விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் போட்டியில் ரோகித்சர்மா 2 சிக்சர்கள் அடித்து புதிய சாதனை படைப்பார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 5 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். இன்றைய போட்டியிலாவது அவர் சிறப்பாக விளையாடி 2 சிக்சர் அடித்து புதிய சாதனை நிகழ்த்துவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.