X

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி – இந்தியா தோல்வி

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 40 சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் களமிறங்கினர்.

ரோகித் சர்மா 5 ரன்னிலும், விராட் கோலி 24 ரன்னிலும், ரிஷப் பந்த் 3 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பொறுப்புடன் ஆடிய லோகேஷ் ராகுல் அரை சதமடித்து அவுட்டானார்.

மகேந்திர சிங் தோனி ஓரளவு தாக்குப்பிடித்து 29 ரன்னுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா சார்பில் நாதன் கவுல்டர் நைல் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 127 ரன்களை இலக்காக கொண்டு ஆஸ்திரேலியா களமிறங்கியது. அந்த அணி 5 ரன் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்தது.

அடுத்து இறங்கிய மேக்ஸ்வெல், தொடக்க ஆட்டக்காரரான ஆர்கி ஷாட்டுடன் இணைந்து நிதானமாக ஆடினார். இருவரும் 84 ரன்கள் சேர்த்தனர். ஆர்கி ஷாட் 37 ரன்னில் அவுட்டானார். கிளென் மேக்ஸ்வெல் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 56 ரன்னில் வெளியேறினார்.

ஆஸ்திரேலிய அணி இடையில் விக்கெட்டுகளை இழந்து திணறினாலும், பரபரப்பான கட்டத்தில் பொறுப்புடன் ஆடி வெற்றி பெற்றது.

அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதையடுத்து, டி20 தொடரில் 1-0 என ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.