இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
நிர்ணயித்த 50 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹேண்ட்ஸ்கோம்ப் 61 பந்துகளில் 73 ரன்களும், கவாஜா 81 பந்துகளில் 59 ரன்களும், மார்ஸ் 70 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தனர்.
இந்தியா அணியில் புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்களும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.
தவான் டக் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி 3 ரன்னில் வெளியேறினார். பின்னர் வந்த அம்பதி ராயுடு ரன் ஏதும் எடுக்கவில்லை.
அடுத்து ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார் டோனி. இருவரும் நிதானமாக விளையாடினர். அரை சதமடித்த டோனி 51 ரன்னில் அவுட்டானார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ரோகித் சர்மா தனி ஒருவனாக போராடி சதமடித்தார். அவரது போராட்டம் வீணானது. அவர் 129 பந்துகளில் 6 சிக்சர், 10 பவுண்டரியுடன் 133 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து இறுதிக்கட்ட விக்கெட்டுகளும் விரைவில் விழுந்தன.
இறுதியில், இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 254 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
ஆஸ்திரேலியா சார்பில் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டும், ஜேசன் பெஹர்ண்டாப், ஸ்டோனிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.