ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா திணறல்
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடந்த 20 ஓவர் போட்டித் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
அடுத்ததாக இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. ‘ஆலன்-பார்டர்’ கோப்பைக்கான இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று காலை தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
இதன்படி, பேட்டிங்கை துவங்கிய இந்திய அணியில், லோகேஷ் ராகுலும், முரளி விஜயும் துவக்க ஆட்டக்காரர்களா களம் இறங்கினர். ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சாளர்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் இருவருமே தடுமாறினர். ஹேசல்வுட் வீசிய பந்தில், ராகுல் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், விக்கெட்டை பறிகொடுத்தார். சிறிது நேரத்தில், முரளி விஜயும் 11 ரன்கள் சேர்த்து தனது விக்கெட்டை தாரை வார்த்தார்.
இந்திய அணி பெரிதும் நம்பியிருக்கும் கேப்டன் விராட் கோலியும் 3 ரன்கள் மட்டுமே சேர்த்து பட் கம்மின்ஸ் பந்தில் காவ்ஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினர். இந்திய அணி 11 ஓவர்கள் வரையிலும் 3 விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் சேர்த்து தடுமாறி வருகிறது.
ஐ.சி.சி. டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் இந்திய அணி 116 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்க வைப்பதற்கு குறைந்தது ஒரு டெஸ்டிலாவது இந்திய அணி ‘டிரா’ செய்ய வேண்டும்.
தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்டுகளிலும் வெற்றி பெற்றால் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேற முடியும். அவ்வாறு நிகழ்ந்தால் இந்திய அணி 108 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்படும். அதே சமயம் இந்திய அணி தொடரை முழுமையாக கைப்பற்றினால் அதன் புள்ளி எண்ணிக்கை 120 ஆக உயரும்.