நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் அறம் வளர்த்த நாயகி கோவிலில் இருந்து, 1982ம் ஆண்டு ஐம்பொன் நடராஜர் சிலை திருடப்பட்டது.
இந்த சிலையின் மதிப்பு சுமார் ரூ.30 கோடி இருக்கும். இந்த சிலையை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில், பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
இதற்கிடையே திருடு போன நடராஜர் சிலை தெற்கு ஆஸ்திரேலியாவின் அருங்காட்சியகம் ஒன்றில் காட்சி பொருளாக வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினரின் நடவடிக்கை காரணமாக, 700 ஆண்டுகள் பழமையான பஞ்சலோக நடராஜர் சிலை மீட்கப்பட்டு டெல்லியில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் விரைவு ரெயில் மூலம் சென்னைக்கு 13ம் தேதி (இன்று) நடராஜர் சிலை கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை விரைவு ரெயில் மூலம் சென்னைக்கு நடராஜர் சிலை கொண்டு வரப்பட்டது. சிலை ரெயிலில் இருந்து இறக்கப்பட்டதும் பொது மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். இதனையடுத்து அந்த சிலைக்கு ஆகம விதிப்படி பூஜைகள் செய்யப்பட்டு எடுத்து செல்லப்பட்டது.
நீதிமன்றத்தில் சிலையை ஒப்படைத்து, உரிய சட்ட நடவடிக்கைக்குப்பின் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோவில் நிர்வாகத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.