ஆஸ்திரேலியாவில் ஊரடங்கை மீறி காதலியை சந்திக்க சென்ற வாலிபருக்கு சிறை தண்டனை

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில நாடுகளில் மக்கள் கொரோனா வைரசின் வீரியத்தை புரிந்து கொள்ளாமல் ஊரடங்கை உதாசீனப்படுத்தி வருகின்றனர். இதனால் அந்த நாடுகள் ஊரடங்கை மீறும் நபர்களுக்கு அபராதம், சிறை போன்ற தண்டனைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலியாவிலும் ஊரடங்கை மீறினால் சிறை தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அந்த நாட்டு அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மேற்கு ஆஸ்திரேலியா மாகாணத்தின் தலைநகர் பெர்த்தில் உள்ள ஒரு ஓட்டலில் ஏராளமான நபர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர். அந்த ஓட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்த ஜொனாதன் டேவிட் (வயது 35) என்ற வாலிபர் போலீசார் மற்றும் சுகாதார ஊழியர்களின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு ஓட்டலில் இருந்து வெளியே சென்றார்.

ஆனால் வழியில் ஊரடங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் அவர் சிக்கினார். அதனை தொடர்ந்து ஊரடங்கை மீறியதாக கூறி போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது அவர் உணவு வாங்குவதற்காக ஊரடங்கு சட்டத்தை மீறியதாக நீதிபதியிடம் தெரிவித்தார். எனவே நீதிபதி அவருக்கு தண்டனை எதுவும் வழங்காமல் எச்சரித்து அனுப்பிவைத்தார்.

எனினும் அடுத்த சில மணி நேரத்தில் ஜொனாதன் டேவிட் மீண்டும் ஓட்டலில் இருந்து வெளியேறி சாலையில் சுற்றிக்கொண்டிருந்தார். எனவே அவரை போலீசார் மீண்டும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது அவர் தனது காதலியை பார்க்க ஓட்டலில் இருந்து வெளியே வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து, அவருக்கு 1 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools