ஆஸ்திரேலியாவின் அடுத்த கேப்டன் லாபஸ்சாக்னே தான் – ரிக்கி பாண்டிங் கருத்து

டேவிட் வார்னர், ஸ்மித் தடையின்போது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி மிகப்பெரிய அளவில் தடுமாறியது. அவர்கள் வந்தபின் ஆஷஸ் தொடரில் இருந்து அந்த அணி வேகம் எடுத்துள்ளது.

ஆஷஸ் தொடரின் போது ஸ்மித்திற்கு மாற்றாக வந்த மார்னஸ் லாபஸ்சாக்னே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 3-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் கோடைக்கால சீசனில் ரன்மேல் ரன் குவித்து வருகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு டெஸ்டிலும் சதம் அடித்த லாபஸ்சாக்னே, நியூசிலாந்துக்கு எதிரான பெர்த் டெஸ்டிலும் சதம் அடித்தார்.

மெல்போர்ன் டெஸ்டில் ஏமாற்றம் அளித்தாலும், இன்று தொடங்கிய சிட்னி டெஸ்டில் சதம் அடித்துள்ளார். கடந்த ஐந்து போட்டிகளில் நான்கு சதம் விளாசியுள்ளார். தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் லாபஸ்சாக்னேவை அடுத்த கேப்டனாக பார்க்கிறேன் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

மார்னஸ் லாபஸ்சாக்னே எதிர்காலம் குறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘டிம் பெய்ன் டெஸ்டில் இருந்து ஓய்வு பெறும் வயதை எட்டவில்லை. கடந்த வாரம் மெல்போர்னில் நடைபெற்ற போட்டியில் அவருடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தற்போது டிராவிஸ் ஹெட் துணைக் கேப்டனாக உள்ளார். அடுத்த 12 முதல் 18 மாதங்களில் மார்னஸ் லாபஸ்சாக்னேவும் கேப்டன் பதவிக்கு தகுதியானவர் என்ற பேச்சு மெல்ல மெல்ல தொடங்கும் அளவிற்கு அணியில் அவரை நிலைநிறுத்திக் கொள்வார். தற்போதைய கேப்டன் அணியில் இருந்து விலகும்போது அவர் சரியான நபராக இருப்பார்.

டிம் பெய்ன் இன்னும் ஒரு வருடம் கேப்டனாக இருக்க நான் ஆதரவு கொடுப்பேன். அவருக்கு 35 வயதாகிறது. ஆனால் கிரிக்கெட் வரைமுறையின்படி அவர் இன்னும் இளமையாக இருக்கிறார். டிம் பெய்னின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். சிறந்த கீப்பர் பற்றி எல்லோருக்கும் தெரியும், அவர் தொடர்ந்து ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு பங்களிப்பாக இருந்தால், குறைந்த ஒரு வருடம் அணியில் நீடிப்பார்’’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news