Tamilசினிமா

ஆஸ்கார் விருது போட்டியில் ‘சூரரைப் போற்று’

சூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிய இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

கடந்த ஆண்டு ஓ.டி.டி தளத்தில் வெளியான படங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம் என்ற சாதனையை சூரரைப் போற்று படைத்தது.

இந்நிலையில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் களமிறங்கியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த முறை ஆஸ்கர் போட்டியில் சில மாற்றங்களைச் செய்துள்ளனர். அதன்படி ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் கூட ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கலாம்.

அந்த வகையில் பொதுப்பிரிவில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்  சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் போட்டியிடுகிறது. இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.