அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், பிரபல ஹாலிவுட் நடிகர் வில்ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் பற்றி தொகுப்பாளரும் காமெடி நடிகருமான கிறிஸ் ராக், நகைச்சுவையாக பேசினார். அப்போது ஜடா பிங்கெட்டின் தலைமுடியை கிறிஸ் ராக் கிண்டல் செய்தார். அதனால் அதிருப்தி அடைந்த வில் ஸ்மித் மேடைக்கு சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் அறைந்தார்.
பின்னர் சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற வில் ஸ்மித் தனது செயலுக்கு கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டார். சக நடிகரை வில் ஸ்மித் தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது ஆஸ்கர் அகாடமி நிர்வாகத்திற்கு தர்ம சங்கடத்தை உண்டாக்கியது.
இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக ஆஸ்கர் அகாடமி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்த பின் நிகழ்ச்சியை விட்டு வெளியேற வில் ஸ்மித்திடம் கேட்டு கொள்ளப்பட்டது. ஆனால் அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற மறுத்துவிட்டதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
நாங்கள் நிலைமையை வேறு விதமாக கையாண்டிருக்கலாம் என்பதையும் ஒப்புக்கொள்கிறோம். அகாடமியின் நடத்தை விதிகளை மீறியதற்காக வில் ஸ்மித் மீது இன்று ஒழுங்கு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது. வில் ஸ்மித்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏப்ரல் 18-ந் தேதி நடைபெறும் நிர்வாக குழு கூட்டத்தில் ஒழுங்கு நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.