X

ஆஸ்கர் விருது கமிட்டி உறுப்பினராக நடிகர் சூர்யா தேர்வு

திரையுலகில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் உலகம் முழுவதும் இருந்து நான்காயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.

ஆண்டு தோறும் ஆஸ்கர் கமிட்டியின் உறுப்பினர் விவரம் மாறுபடும். இந்நிலையில், ஆஸ்கர் விருது உறுப்பினர் குழுவில் புதிதாக 397 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். நடிகர்கள், இயக்குனர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் என பல்வேறு துறைகளில் இருந்து தேர்வு நடைபெற்றுள்ளது.

இதில் இந்தியாவில் இருந்து நடிகர் சூர்யா, நடிகை கஜோல் ஆகியோர் ஆஸ்கர் குழுவில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த செய்தியானது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

மேலும், புதிய உறுப்பினர்கள் ஆஸ்கர் பட்டியலுக்கான திரைப்படங்களை தேர்வு செய்ய வாக்களிக்கும் உரிமை பெறுவார்கள். நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய திரைப்படங்கள் ஆஸ்கர் விருது போட்டியில் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது.