X

ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தி வார்த்தை – மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு ஆணையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

தமிழ்நாட்டின் ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி தயிர் பாக்கெட்டுகளில், இந்தி வார்த்தையான ‘தஹி’ என அச்சிட வேண்டும் எனவும், தமிழில் ‘தயிர்’ கன்னடத்தில் ‘மோசரு’ போன்ற வார்த்தைகளை அடைப்பு குறிக்குள் பயன்படுத்தலாம் என மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு தென்மாநிலங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சி என சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசின் இந்த அறிவுறுத்தலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். ‘எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் உணவுப் பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டு ஆணையம், தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்! மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! இந்தி திணிப்பை நிறுத்துங்கள்.

குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்!’ என மு.க.ஸ்டாலின் காட்டமாக கூறி உள்ளார்.