ஆள் மாராட்டம் செய்து நீட் தேர்வு எழுதிய சென்னை வாலிபர்? – விசாரணைக்கு உத்தரவிட்ட மருத்துவதுறை
சென்னையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கடந்த 2018ம் ஆண்டு மும்பையில் நீட் தேர்வு எழுதினார். அவர் வெற்றி பெற்றதையடுத்து தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார். அவரது ஹால்டிக்கெட்டில் இருந்த புகைப்படமும் தற்போதுள்ள முகமும் மாறுபட்டு இருந்தது.
இதனால் சந்தேகமடைந்த தேனி மருத்துவ கல்லூரி அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தார். இதனால் அவரது ஹால்டிக்கெட் மற்றும் தற்போதுள்ள புகைப்படம், அவரது மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். மேலும் சென்னையில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கையில், சென்னையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி இருப்பதாக எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது தந்தை சென்னையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இது குறித்து மாணவனின் பெற்றோரை வரவழைத்து விசாரித்தபோது தங்களது பையன்தான் நீட் தேர்வு எழுதியதாக கூறினர். தமிழகத்தில் ஏராளமான நீட் தேர்வு மையங்கள் உள்ள போது மும்பையில் எதற்காக தேர்வு எழுதுனீர்கள்? என கேட்டதற்கு ஏற்கனவே 2 முறை தமிழகத்தில் தேர்வு எழுதி தோல்வியடைந்து விட்டதாகவும், இதனால் வேறு மாநிலத்தில் தேர்வு எழுத முடிவு செய்ததாகவும் தெரிவித்தனர்.
இருந்தபோதும் அவர்களது பேச்சில் நம்பகத்தன்மை இல்லை என்பதால் அனைத்து ஆவணங்களையும் டெல்லி தேசிய தேர்வு முகமைக்கு அனுப்பி வைத்துள்ளோம். புகாருக்கு உள்ளான மாணவன் கடந்த 4 நாட்களாக கல்லூரிக்கு வரவில்லை. ஆள் மாறாட்டம் செய்தது உண்மை என தெரிந்தால் அவர் மீது தேர்வு முகமை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவித்தனர்.