Tamilவிளையாட்டு

ஆல் ரவுண்டர் பிராவோ ஆகியோரை பாராட்டிய கேப்டன் டோனி

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் முதல் கட்ட ஆட்டங்கள் ஏப்ரல் 9 முதல் மே 2 வரை இந்தியாவில் நடைபெற்றது. 2-வது கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நேற்று தொடங்கியது.

துபாயில் நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது.

முதலில் விளையாடிய சி.எஸ்.கே. அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களே எடுக்க முடிந்தது. தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிகபட்சமாக 58 பந்தில் 88 ரன் எடுத்தார். இதில் 9பவுண்டரியும், 4 சிக்சர்களும் அடங்கும். பிராவோ 8 பந்தில் 23 ரன் (3 சிக்சர்) எடுத்தார்.

போல்ட், ஆடம் மிலின், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்

பின்னர் ஆடிய மும்பை அணி சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் திணறியது. அந்த அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

சவுரப் திவாரி அதிகபட்சமாக 40 பந்தில் 50 ரன் (5 பவுண்டரி) எடுத்தார். பிராவோ 3 விக்கெட்டும், தீபக் சாகர் 2 விக்கெட்டும், ஹாசல்வுட், ‌ஷர்துல் தாகூர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இந்த வெற்றி மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்சுக்கு பதிலடி கொடுத்தது. இந்த சீசனில் டெல்லியில் நடந்த ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி மும்பையிடம் தோற்று இருந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 6-வது வெற்றி இதுவாகும். இதன்மூலம் 12 புள்ளிகள் பெற்று சி.எஸ்.கே. புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது. அந்த அணியும், டெல்லியும் தலா 12 புள்ளிகள் பெற்று உள்ளன. ரன் ரேட் அடிப்படையில் டெல்லியை பின்னுக்கு தள்ளி சென்னை முதல் இடத்தை பிடித்து உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த வெற்றிக்கு காரணமான தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட், ஆல் ரவுண்டர் பிராவோ ஆகியோரை கேப்டன் டோனி பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

நாங்கள் ஒரு கட்டத்தில் 30 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்தோம். அப்போது ஒரு நல்ல ஸ்கோர் வேண்டும் என்று நாங்கள் 140 ரன் வரை எதிர்பார்த்தோம். ஆனால் 160 ரன் வரை நெருங்கிவிட்டோம். இது மிகவும் பிரமாதமாக இருந்தது.

ருதுராஜ் கெய்க்வாட்டும், பிராவோவும் நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டனர்.

ஆடுகளம் இரண்டு நிலையில் இருந்தது. தொடக்கத்தில் சற்று மெதுவாக இருந்தது. பின் களத்தில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருந்தது. அம்பர்த்தி ராயுடு காயம் அடைந்தார். அதில் இருந்து மீண்டு வருவது கடினமாக இருந்தது. ஆனால் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்தோம். ஒரு பேட்ஸ்மேன் இறுதி வரை களத்தில் நிற்பது புத்திசாலித்தனமானது.

இவ்வாறு டோனி கூறி உள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 24-ந் தேதி சார்ஜாவில் எதிர்கொள்கிறது. 4-வது தோல்வியை தழுவிய மும்பை அணி 9-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்சை 23-ந் தேதி அபுதாபியில் சந்திக்கிறது.

அபுதாபியில் இன்று நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர்- கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

பெங்களூர் அணி 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. கொல்கத்தா 2 வெற்றி, 5 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று உள்ளது. அந்த அணி 3-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.