Tamilவிளையாட்டு

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் – இன்று தொடங்குகிறது

நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காமில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. மொத்தம் ரூ.6 கோடி பரிசுத்தொகைக்கான இந்த போட்டி வருகிற 21-ந் தேதி வரை நடைபெறுகிறது.

கடந்த வாரம் நடந்த சுவிட்சர்லாந்து ஓபனில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் (ஸ்பெயின்) காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். கொரோனா பிரச்சினை காரணமாகவும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றாக இதன் முடிவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்பதாலும் சீனா, கொரியா, சீன தைபேவை சேர்ந்த நட்சத்திர வீரர், வீராங்கனைகள் பலரும் இந்த போட்டியில் இருந்து ஒதுங்கி உள்ளனர்.

இருப்பினும் கவுரவமிக்க இந்த போட்டியில் இந்தியா சார்பில் 19 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். உலக சாம்பியனும், ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் மலேசியாவின் சோனியா செக்கை சந்திக்கிறார். சுவிட்சர்லாந்து ஓபன் இறுதி ஆட்டத்தில் ஏமாற்றம் அளித்த சிந்து இந்த போட்டியில் சாதிக்க நல்ல வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில் அரைஇறுதிக்கு மேல் தாண்டாத சிந்து இந்த முறை வாகை சூடுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒகுஹரா (ஜப்பான்), யமாகுச்சி (ஜப்பான்), ராட்சனோக் இன்டானோன் (இந்தோனேஷியா) உள்ளிட்டோர் அவருக்கு கடும் சவாலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2015-ம் ஆண்டில் 2-வது இடத்தை பிடித்தவரான முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நேவால் முதல் சுற்றில் டென்மார்க்கின் மியா பிலிச்பெல்டுடன் மோதுகிறார். கடந்த 2 ஆண்டுகளில் சாய்னா 2 போட்டிகளில் மட்டுமே கால்இறுதியை எட்டி இருக்கிறார். அதனால் இந்த சாம்பியன்ஷிப்பில் அவரது தாக்கம் பெரிய அளவில் இருக்குமா? என்பது கேள்விக்குறி தான்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் இந்தோனேஷியாவின் டாமி சுஜியார்டோவை எதிர்கொள்கிறார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீரரான சாய் பிரனீத் தனது முதல் சுற்றில் பிரான்ஸ் வீரர் டோமா ஜூனியரை சந்திக்கிறார்.

காமன்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரரான காஷ்யப்புக்கு தொடக்க சுற்றிலேயே கடும் சோதனை காத்து இருக்கிறது. அவர் நம்பர் ஒன் வீரரும், உலக சாம்பியனுமான ஜப்பானின் கென்டோ மோமோட்டோவுடன் மல்லுக்கட்டுகிறார். கடந்த வருடம் நடந்த கார் விபத்தில் சிக்கி கண்ணில் அறுவை சிகிச்சை செய்துள்ள மோமோட்டோ அதன் பிறகு களம் காணும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.

இந்த போட்டி தொடரில் இதுவரை இந்தியர்களில் பிரகாஷ் படுகோனே (1980), கோபிசந்த் (2001) ஆகியோர் மட்டுமே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.