X

ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் – கடினமான போட்டியில் சிந்து, சாய்னா

மொத்தம் ரூ.7 கோடி பரிசுத்தொகைக்கான ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காமில் அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் மூலம் (டிரா) நிர்ணயிக்கப்பட்டு போட்டி அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன்படி இந்திய முன்னணி வீரர், வீராங்கனைகள் அனைவரும் கடினமான பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.

ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மங்கையான இந்தியாவின் பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் தென்கொரியாவின் சங் ஜி ஹயூனை எதிர்கொள்கிறார். சங் ஜி ஹயூன், கடந்த ஆண்டு ஹாங்காங் ஓபனில் சிந்துவை வீழ்த்தியவர். அதனால் சிந்து மிகவும் எச்சரிக்கையாக ஆட வேண்டியது முக்கியம். முதல் இரண்டு சுற்றுகளில் சிந்து வெற்றி கண்டால், கால்இறுதியில் பலம் வாய்ந்த 4-ம் நிலை வீராங்கனையான சென் யூபெயுடன் (சீனா) மோத வேண்டி இருக்கும்.

மற்றொரு இந்திய நட்சத்திரம் சாய்னா நேவால் முதல் சுற்றில் ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மோருடன் மோதுகிறார். முதல் இரண்டு தடையை சாய்னா வெற்றிகரமாக கடந்தால், கால்இறுதியில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள தாய் ஜூ யிங்குடன் (சீனதைபே) மல்லுக்கட்ட வேண்டி வரும். தாய் ஜூ யிங்குடன் கடைசியாக மோதிய 12 ஆட்டங்களில் சாய்னா தொடர்ச்சியாக தோல்வி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கவுகாத்தியில் தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடி வரும் சிந்துவும், சாய்னாவும் இந்த போட்டியை முடித்துக் கொண்டு இங்கிலாந்துக்கு புறப்படுவார்கள்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில், 8-ம் நிலை வீரரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த், முதல் ரவுண்டில் பிரைஸ் லெவர்டெசை (பிரான்ஸ்) சந்திக்கிறார். அனேகமாக அவர் கால்இறுதியில் ‘நம்பர் ஒன்’ வீரர் கென்டோ மோமோட்டாவை (ஜப்பான்) சந்திக்க வேண்டியது இருக்கும். மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் பிரனாய், சாய் பிரனீத் நேருக்கு நேர் சந்திக்க இருக்கிறார்கள். அதே சமயம் சமீர் வர்மா தனது சவாலை முன்னாள் முதல் நிலை வீரர் விக்டர் ஆக்சல்சென்னுடன் (டென்மார்க்) தொடங்குகிறார். பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி-சிக்கி ரெட்டி ஜோடியாக இறங்குகிறார்கள்.

நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த கவுரவமிக்க இந்த போட்டியில் பிரகாஷ் படுகோனே (1980-ம் ஆண்டு), கோபிசந்த் (2001-ம் ஆண்டு) ஆகியோர் தவிர வேறு எந்த இந்தியரும் மகுடம் சூடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.