ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஜப்பானின் அகானே யமாகுச்சியை எதிர்கொண்டார். 28 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த ஆட்டத்தில் சாய்னா 11-21, 8-21 என்ற நேர் செட்டில் சரண் அடைந்தார். தரவரிசையில் 20-வது இடம் வகிக்கும் சாய்னாவுக்கு இந்த தோல்வியின் மூலம் அவரது ஒலிம்பிக் வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-19, 21-15 என்ற நேர் செட் கணக்கில் சங் ஜி ஹயனை (தென்கொரியா) சாய்த்து கால்இறுதியை எட்டினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் லக்ஷயா சென், தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் டென்மார்க் வீரர் விக்டர் ஆக்செல்சனை சந்தித்தார். 45 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தின் இறுதியில் லக்ஷயா சென் 17-21, 18-21 என்ற நேர் செட் கணக்கில் தோற்று வெளியேறினார்.