கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வாத்து பண்ணைகளில் கடந்த மாதம் ஏராளமான வாத்துகள் தொடர்ச்சியாக இறந்தன. இதையடுத்து இறந்த வாத்துக்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு போபாலில் உள்ள ஆய்வகத்ததுக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.
அதில் இறந்த வாத்துக்களுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து தொற்று பாதித்த பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. தொற்று பரவல் காணப்பட்ட பண்ணைகளை சுற்றிலும் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் வளர்க்கப்பட்ட வாத்து, கோழி உள்ளிட்ட உள்நாட்டு பறவைகள் கொல்லப்பட்டன.
ஆலப்புழா பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் கொல்லப்பட்டன. அந்த பறவைகள் தனியாக ஒரு இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு எரித்து அழிக்கப்பட்டன. பறவை காய்ச்சல் பரவலை தடுக்கும் நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டனர்.
மேலும் மற்ற பகுதிகளுக்கு தொற்று பரவாமல் இருக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பறவை காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவினரும் ஆலப்புழாவுக்கு வந்தனர். அவர்கள் மாநில சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளபபடும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் கோட்டயம் மாவட்டத்திலும் பறவை காய்ச்சல் பரவியது. மணற்காடு பகுதியில் செயல்படும் கால்நடை பராமரிப்பு துறையின் வட்டார கோழிப் பண்ணையில் வளர்க்கப்பட்ட ஏராளமான கோழிகள் அடுத்தடுத்து இறந்தன. இறந்த கோழிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் போபால் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்பட்டன.
அதில் அந்த கோழிகளுக்கு பறவை காய்ச்சல் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொற்று பாதித்த பண்ணையில் மொத்தம் 9 ஆயிரம் கோழிகள் இருக்கின்றன. அந்த பறவைகளுக்கும் தொற்று பாதிப்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பறவை காய்ச்சல் பரவலை தடுக்க 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மணற்காடு ஊராட்சிக்குட்பட்ட 12, 13, 14 ஆகிய வார்டுகளிலும், புதுப்பள்ளியில் 2, 3 வார்டுகளிலும் அனைத்து வகையான கோழி இறைச்சி மற்றும் அவை சார்ந்த முட்டை உள்ளிட்டவைகளின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த ஊராட்சிகளில் உள்ள மற்ற வார்டுகளிலும் இறைச்சி விற்க வருகிற 29-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஒரு மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவியிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.