X

ஆற்காட்டில் உள்ள திமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கண்ணமங்கலம் கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் ஏ.வி.சாரதி. அ.தி.மு.க. வர்த்தகப் பிரிவு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க.வில் இணைந்தார்.

ஏ.வி.சாரதி சிமெண்ட் ஏஜென்சி உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்து வருகிறார். மேலும் ஆணைமல்லூர் கிராமத்தில் கல்குவாரி ஒன்றும் நடத்தி வருகிறார்.

சமீபத்தில் இவர் தனது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினார்.

இந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆற்காடு, கண்ணமங்கலம் கூட்ரோட்டில் உள்ள ஏ.வி. சாரதியின் வீடு மற்றும் அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

10 பேர் கொண்ட குழுவினர் 3 பிரிவாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல அவருக்குச் சொந்தமான கல்குவாரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனை நடந்த போது வீட்டிற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பல்வேறு ஆவணங்களை வருமான வரிதுறை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தி.மு.க பிரமுகர் வீட்டில் வருமான வரி சோதனை நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.