ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 8 ஆண்டுகளாக ஆர்சிபி அணிக்காக சாஹல் விளையாடி வந்தார். இந்நிலையில் 2022-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின்போது சாஹலை, ஆர்சிபி அணி நிர்வாகம் எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் ஏலத்தில் எடுத்தது. 2022-ம் ஆண்டு முதல் ராஜஸ்தான் அணிக்காக சாஹல் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் 2022 ஏலத்தில் ஆர்சிபி அணி அவரை ஏலத்தில் எடுக்காதது குறித்து சாஹல் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஆர்சிபி அணிக்காக 140 போட்டிகளில் விளையாடியுள்ளேன். பல போட்டிகளில் வெற்றி தேடிக் கொடுத்தேன். ஆனால், 2022-ம் ஆண்டு என்னை அவர்கள் ஏமாற்றிவிட்டனர். ஏலம் குறித்து ஆர்சிபி அணியிடமிருந்து எனக்கு ஒழுங்கான தகவல் தெரிவிக்கவில்லை.
ஆர்சிபி அணிக்காக 8 ஆண்டுகள் விளையாடி உள்ளேன். ஆனால் 2022 ஏலத்தில் என்னை எடுக்காததால் நான் மிகவும் கோபமடைந்தேன். அதிக வருத்தம் அடைந்தேன். பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் விளையாட்டு மைதானம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல், 145 போட்டிகளில் விளையாடி 187 விக்கெட்டுகள் எடுத்து பிராவோவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் உள்ளார்.