Tamilசெய்திகள்

ஆர்.எஸ்.எஸ் தொண்டர் தீக்குளித்து மரணம்! – இன்று கேரளாவில் பந்த்

சபரிமலையில் 144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும், ஐயப்ப பக்தர்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன்பு பந்தல் அமைத்து பா.ஜனதா கட்சியினர் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். நேற்று அதிகாலை வேணுகோபாலன் என்ற ஆர்.எஸ்.எஸ். தொண்டர் போராட்ட பந்தலின் முன்பு ‘சாமியே சரணம் ஐயப்பா’ என்று கோஷம் எழுப்பியபடி தனது உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.

சபரிமலை விவகாரத்தில் திருவனந்தபுரம் மட்டும் அல்லாமல் கேரளா முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வந்தாலும் முதல் முறையாக ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஒருவர் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் திருவனந்தபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சபரிமலை போராட்ட விவகாரத்தில் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த முன்வராததை கண்டித்து இன்று மாநில அளவிலான முழு அடைப்பு போராட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்தது. அதன்படி இன்று காலை முதல் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் இயக்கப்படவில்லை. தமிழகத்தில் இருந்து செல்லும் பேருந்துகள் அனைத்தும் கேரள எல்லையில் நிறுத்தப்பட்டன. பாஜகவினர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான தேர்வுகள் 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள பல்கலைக்கழக மற்றும் கேரள தொழில்நுட்ப பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வன்முறைச் சம்பவங்களை தவிர்க்கும் வகையில், முக்கிய சந்திப்புகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *