Tamilசினிமா

ஆர்.ஆர்.ஆர் பட போஸ்டர் காப்பியா? – இயக்குநர் ராஜமவுலியை கிண்டல் செய்யும் ரசிகர்கள்

பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5  மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதனிடையே இப்படம் வருகிற அக்டோபர் 13-ந் தேதி வெளியிடப்படும் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு, சிறப்பு போஸ்டரையும் வெளியிட்டது. அதில் ராம் சரண் குதிரையில் செல்வது போலவும், ஜூனியர் என்.டி.ஆர் புல்லட்டில் செல்வது போலவும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், அந்த போஸ்டர் ஹாலிவுட்டில் கடந்த 2007-ம் ஆண்டு வெளிவந்த கோஸ்ட் ரைடர் பட போஸ்டரின் காப்பி போல் இருப்பதாக கூறி சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். அண்மையில் வெளிவந்த தனுஷின் ஆயிரத்தில் ஒருவன் 2, கமலின் விக்ரம் பட போஸ்டர்கள் இதேபோல் காப்பி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.