ஆரிய படையெடுப்புகளை வீழ்த்தும் ஆயுதம்தான் திராவிடம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் பல்லாவரத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஆறாவது முறையாய் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு, ஈராண்டை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நாட்காட்டியில் நகரும் ஒவ்வொரு நாளும் நாட்டுக்கு நன்மை செய்யும் நாளாகவே அமைந்துள்ளது. தினந்தோறும் திட்டங்கள் தீட்டி வருகிறோம். ஊர்தோறும் வளர்ச்சியைக் கண்டு வருகிறோம். துறைதோறும் மலர்ச்சியை உருவாக்கி வருகிறோம்.
திசைதோறும் கவனத்தை ஈர்த்துள்ள திராவிட மாடல் மக்களாட்சியின் மகத்தான பயணம் பல பத்து ஆண்டுகளுக்கும் தொய்வின்றித் தொடரும். 10 ஆண்டு காலம் பாழ்பட்டு கிடந்த தமிழ்நாட்டை மீட்டது உதயசூரியன் ஆட்சி. திராவிடம் யாரையும் பிரிக்காது, அனைவரையும் அரவணைக்கும். திராவிடம் என்பது காலாவதியான கொள்கை அல்ல, சனாதனத்தை காலாவதியாக்கியது திராவிடம். வர்ணாசிரமத்தை காலாவதியாக்கியது திராவிடம். ஆரிய படையெடுப்புகளை வீழ்த்தும் ஆயுதம்தான் திராவிடம்.
எந்த நோக்கத்திற்காக ஆளுநர் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்? தமிழ்நாட்டில் நிலவும் அமைதியை குலைக்க ஆளுநர் வந்துள்ளாரா என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆளுநரும் எதிர்க்கட்சி தலைவராக மாறிவிட்டார் போலும். ஆரியத்தை வீழ்த்தும் ஆயுதம் தான் திராவிடம். அதனால் தான் அதை பார்த்து ஆளுநர் பயப்படுகிறார்.
தனிப்பட்ட நட்புக்காக கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டேன். கொள்கையில் எப்போதும் உறுதியாக இருப்பேன். ஆளுநர் உடனான தனிப்பட்ட நட்பு வேறு, கொள்கை வேறு. மிசா, பொடா, தடா உள்ளிட்டவற்றை நாங்கள் பார்த்தவர்கள். ஆட்சியாக, கட்சியாக இருந்தாலும் தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என தெரிவித்தார்.