முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், உயிரி தொழில் நுட்ப கல்வி மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்திட, தமிழ்நாட்டின் பல்வேறு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் டைசல் நிறுவனத்திற்கும் இடையே 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா நிலை-IIல் 350 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்கள் தொழிற் பூங்காவில், முதல் நில ஒதுக்கீட்டு ஆணையினை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜெனியுன் பயோ சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தனசேகரனிடம் வழங்கினார்.
35 கோடி ரூபாய் செலவில் சிறுசேரி சிப்காட் தகவல் தொழில் நுட்பப் பூங்காவில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் இதர ஏற்றுமதியாளர்கள் பயன்பெறும் வகையில் 85,000 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ள மூன்று கருத்தரங்கு கூடங்கள் மற்றும் இரண்டு பயிற்சி மையங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் தகவல் தொழில் நுட்ப சேவைகள் மற்றும் தயாரிப்புகளின் ஏற்றுமதிக்கு உதவும் ஏற்றுமதி வணிக வசதிகள் மையம்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் தங்குவதற்காக ஒரு ஏக்கர் பரப்பளவில் 400 ஆண் பணியாளர்கள் தங்கும் வகையில் தரை மற்றும் 2 தளங்களுடன் 10.19 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆண்கள் தங்கும் விடுதிக் கட்டிடம். சிறுசேரி சிப்காட் தகவல் தொழில் நுட்பப் பூங்காவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம்.
இருங்காட்டுக் கோட்டையில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் என மொத்தம் 48 கோடியே 7 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.