ஆய்வுக்கு வராத விஏஓ! – திமுக எம்.எல்.ஏ அதிரடி நடவடிக்கை
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி பகுதியின் பேரையூர் கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள், விவசாயம் நல்ல முறையில் மேற்கொள்ள அப்பகுதியின் திமுக எம்எல்ஏ ராஜாவிடம் ஓர் புகார் மனு அளித்துள்ளனர்.
இந்த மனுவில் பேரையூரில் அமைந்துள்ள வடவாறு வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு, அதன் அகலம் சுருங்கிவிட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து களத்திற்கு திமுக எம்எல்ஏ ராஜா விரைந்துள்ளார்.
அங்கு சென்ற பின்னர் கிராம நிர்வாக அலுவலரை (விஏஓ) நிகழ்விடத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். சில மணி நேரம் காத்திருந்தும் அதிகாரி வராததால், அவரை வரவழைக்க ராஜா வித்தியாசமான முறையை கையாண்டார்.
ஒரு தட்டில் வெற்றிலைப்பாக்கு, பூ, பழங்கள் என அனைத்தையும் வைத்து எடுத்துக் கொண்டு வட்டாட்சியர் அலுவலகம் விரைந்தார் எம்எல்ஏ ராஜா.
அந்த அதிகாரியிடம் ராஜா கூறுகையில், ‘நம்ம ஊர் விவசாயிகள் நம்மிடம் வடவாறு வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது குறித்து மனு அளித்திருந்தார்கள். அதன்படி பாசன கால்வாய் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
அதற்காகவே உங்களுக்கு களத்தில் ஆய்வு செய்யவும், கணக்குகள் குறித்து கேட்கவும் நேரில் வந்து அழைப்பு விடுத்துள்ளோம். வந்து விடுங்கள்’ என கூறினார். சில நிமிடங்கள் திகைத்த அதிகாரிகள் என்ன செய்வதென்று புரியாமல் உடனடியாக அவருடன் களத்திற்கு விரைந்தனர்.
இதனையடுத்து ஆய்வு நடத்திய பின்னர் அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றி விரைவில் நீர்பாசன வாய்க்கால் அமைத்து தருகிறோம் என திமுக எம்எல்ஏ ராஜா முன்னிலையில் விவசாயிகளுக்கு உறுதி அளித்தனர்.