அலோபதி மருத்துவர்கள் செய்துவந்த அறுவை சிகிச்சைகளை இனி, முதுநிலை படிப்பை முடித்த ஆயுர்வேத மருத்துவர்களும் செய்யலாம் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. மேலும், நிதியோக் அமைப்பு நான்கு குழுக்களை அமைத்து மருத்துவக்கல்வி, மருத்துவ ஆராய்ச்சி, மருத்துவ பயிற்சி, பொதுமக்களுக்கான சுகாதார முறைகள் ஆகிய அனைத்து மருத்துவ துறைகளையும் (நவீன மருத்துவம், ஆயுஷ்) கலந்து ஒரே கலவை முறைகளை 2030-ல் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது நடைமுறைக்கு வந்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அலோபதி மருத்துவர்கள் கூறுகிறார்கள். மத்திய அரசின் இந்த அறிவிப்பை கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மத்திய அரசின் அறிவிப்பைக் கண்டித்து டிசம்பர் 11ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர். கொரோனா சிகிச்சைப்பிரிவு, அத்தியாவசிய மருத்துவ சேவைகள் தவிர பிற மருத்துவ சேவைகளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புறக்கணிக்கும்படி இந்திய மருத்துவ சங்கம் கேட்டுக்கொண்டது. அதன்படி இன்று நாட்டின் பல்வேறு இடங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த டாக்டர்கள் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் டாக்டர்கள் இன்றி நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்டிரைக்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், அவசர சிகிச்சை பிரிவு, லேபர் வார்டுகள், ஐசியு, சிசியு வார்டுகள் மற்றும் அவசர அறுவை சிகிச்சைகள் போன்ற அவசர சேவைகள் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்படாது என்று இந்திய மருத்துவ சங்கம் கூறி உள்ளது. எனவே, இந்த பிரிவுகளில் உள்ள மருத்துவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
டாக்டர்களின் வேலைநிறுத்தம் குறித்து நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகள் கவலை தெரிவித்துள்ளன. இந்த மருத்துவமனைகள் நாள் முழுவதும் சீரான மருத்துவ சேவைகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றன.