X

ஆயுத பூஜை பண்டிகைக்கு கவர்னர், தலைவர்கள் வாழ்த்து

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமியையொட்டி கவர்னர் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி:-

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சரஸ்வதி தேவி தனது மெய்ஞானத்தால் அறியாமை என்ற இருளை அகற்றி, நமது மக்களுக்கு வளமையையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும். துர்கா தேவி, நம் மக்களை ஒரே குடும்பமாய் ஒன்றிணைத்து, அனைத்து தடைகளையும் தகர்த்து நமது தேசிய இலக்கை அடைவதற்கான வலிமையை நமக்கு வழங்கட்டும்.

தெலுங்கானா கவர்னரும், புதுவை துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:-

நாடு முழுவதும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி பக்தி உணர்வோடு கொண்டாடப்படுகிறது. கல்வியில் சிறந்து விளங்கவும் தொழில் வளம் பெருகவும் நவராத்திரி பண்டிகையின் ஒன்பதாம் நாளில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் கருவியாகவும், அறிவாகவும் இருந்து செயல்படும் இறையருள் அனைவரின் வாழ்விலும் வெற்றியைத் தர வேண்டும். அனைவரும் அனைத்து வளங்களும், நலங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ எனது மனமார்ந்த ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-

நவராத்திரி எனப்படும் 9 நாட்களின் இறுதியில் ஒன்பதாவது நாளான ஆயுத பூஜை மற்றும் பத்தாவது நாளான விஜயதசமி திருநாளை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். அழிவு இல்லாத சிறந்த கல்வி செல்வத்தை வழங்குகின்ற கலைமகளையும், மனத்திட்பத்தோடு துணிவையும் தரும் மலை மகளையும்; செல்வங்களை அள்ளித் தரும் திருமகளையும் போற்றி வழிபடுவது நவராத்திரி பூஜையின் சிறப்பு அம்சமாகும்.

தமிழக மக்கள் கல்வியிலும், செல்வத்திலும், துணிவிலும் சிறந்து விளங்கவும், அவர்களுடைய வாழ்வில் வெற்றிகள் குவியவும் அருள்புரியுமாறு, உலகிற்கெல்லாம் தாயாக விளங்கும் அன்னை பராசக்தியை போற்றி வணங்குகிறேன். சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன்:- ஆயுத பூஜை என்பது இந்துக்கள் கொண்டாடும் திருவிழா. காலங்காலமாக இது பாரம்பரியமாக இந்தியர்களால் கொண்டாடப்படுகிறது. இது நவராத்திரி விழாவின் ஒரு பகுதி. நவராத்திரி மட்டுமில்லாமல், ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்டவையும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகின்றன. அன்றைய தினம் நம் வாழ்வாதாரத்திற்காக நாம் பயன்படுத்தக்கூடிய தொழில் செய்வதற்கான பொருட்களை, உபகரணங்களைப் பூஜிப்பது வழக்கம். ஆயுத பூஜை கொண்டாடும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

நிச்சயம் ஒரு நாள் வெற்றி வந்து சேரும் என்ற தன்னம்பிக்கையுடன் ஓடிக் கொண்டிருக்கும் அனைத்து தரப்பு மக்களின் உழைப்பும் மேன்மையுடன் போற்றத்தக்கது. தீயசக்தியை அழித்து நல்ல சக்தியின் வெற்றியை குறிக்கும் தினத்தில் மக்களின் எண்ணங்கள் யாவும் ஈடேறவும், தொழில் முன்னேற்றம் காணவும், நிறைவான செல்வமும், மகிழ்ச்சியும், மனநிறைவும், ஆரோக்கியமான நல்வாழ்வும் வாழ்ந்திட இறைவன் அருளட்டும் என பிரார்த்தித்து இனிய ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன்:- ஆயுதபூஜை என்பது அரக்க ராஜாவை அஷ்டமி, நவமி சந்திப்பில் தேவிதுர்கா அழித்த வெற்றியின் கொண்டாட்டமாகவே கருதப்படுகிறது. பண்டைய காலங்களில் போர்க்கருவிகள் வணங்கும் நாளாகவே ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது. ஆனால், இன்றைய கால கட்டத்தில் பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் தாங்கள் அன்றாடம் உபயோகப்படுத்தும் வாகனங்கள், அதாவது மோட்டார் சைக்கிள், ஆட்டோ, கார், சைக்கிள் போன்ற வாகனங்களை கழுவி சுத்தப்படுத்தி, மஞ்சள் குங்குமத்தோடு திலகமிட்டு, சாமந்தி மாலையிட்டு, வாழை தோரணங்களோடு அலங்கரித்து அவல், பொரி, கடலை, பழ வகைகளோடு படையில் செய்து பூஜை செய்து வருகின்றனர். வியாபாரிகள் அன்றைய தினமே சிறந்த நாளாக கருதி புதிய ஆண்டிற்கான புதிய கணக்கை தொடங்குவதை வழக்கமாக கொண்டு உள்ளார்கள். நாடு முழுவதும் ஆயுதபூஜையை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.