ஆம் ஆத்மியின் வெற்றியை பாராட்டிய ப.சிதம்பரத்திற்கு காங்கிரஸ் கண்டனம்!

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது.

பா.ஜனதா 8 தொகுதிகளை பிடித்துள்ளது. ஆனால் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. 63 தொகுதிகளில் டெபாசிட் தொகையை இழந்தது.

இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை காங்கிரஸ் தலைவர்கள் சிலர் பாராட்டியுள்ளனர்.

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. பிரித்தாளும் மோசமான சித்தாந்தத்தை கொண்ட பா.ஜனதாவை, இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த டெல்லி மக்கள் தோற்கடித்துள்ளனர். 2021-22-ம் ஆண்டுகளில் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் மக்கள் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை காட்டியதற்காக டெல்லி மக்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்” என்று கூறி உள்ளார்.

இந்தநிலையில், ப.சிதம்பரம் ஆம் ஆத்மி வெற்றியை பாராட்டியதை டெல்லி மகளிர் காங்கிரஸ் தலைவியும், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகளுமான ‌ஷர்மிஸ்தா முகர்ஜி விமர்சனம் செய்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ப.சிதம்பரத்தின் பதிவை வெளியிட்டு அதில் கூறி இருப்பதாவது:-

பா.ஜனதா கட்சியை தோற்கடிக்கும் பொறுப்பை, ஆம் ஆத்மி கட்சிக்கு நாம் விட்டுக்கொடுத்து விட்டோமா? அப்படி இல்லை என்றால், நம்முடைய தோல்வி குறித்து கவலைப்படுவதற்கு பதில் ஆம் ஆத்மி வெற்றியை நாம் ஏன் கொண்டாடி கொண்டிருக்கிறோம்?

இப்படியே, பா.ஜனதாவை தோற்கடிக்கும் பொறுப்பை மாநில கட்சிகளுக்கு கொடுத்து விட்டால் மாநில காங்கிரஸ் கமிட்டிகள், தங்களுடைய கடையை இழுத்து மூடிவிடலாம்.

இவ்வாறு அவர் காட்டமாக கூறி உள்ளார்.

டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ள ‌ஷர்மிஸ்தா முகர்ஜி, ஆம் ஆத்மி கட்சி வெற்றியை பாராட்டிய ப.சிதம்பரத்தின் கருத்தை கடுமையாக விமர்சித்துள்ளது காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools