Tamilசெய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – சதிதிட்டம் தீட்டிய இடங்களில் வைத்து அருளிடம் விசாரணை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த ஆண்டு பட்டினப்பாக்கத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை சம்பவத்துக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையிலேயே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்த போலீசார் அது தொடர்பாக ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு, குன்றத்தூர் திருவேங்கடம் உள்பட 11 பேரை கைது செய்தனர்.

இவர்களில் திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டு விட்ட நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை சூடு பிடித்து ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ரவுடிகள் பலர் பெரிய அளவில் சதி திட்டம் தீட்டி ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக் கட்டியிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த கொலை வழக்கில் அரசியல் பிரமுகர்கள் பலருக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. பிரமுகர்களான மலர்க்கொடி, ஹரிஹரன், தி.மு.க. பிரமுகரான அருள், த.மா.கா.வை சேர்ந்த ஹரிஹரன், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அஞ்சலை ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அருளை தனியாக அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டாவது முறையாக போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் அருளை இன்று அதிகாலை பெரம்பூர், புழல் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். கொலைக்கான சதித் திட்டம் தீட்டிய இடங்களுக்கும் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.