சென்னை மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை புறநகரில் இருந்து இயக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் பேருந்து முனைமம் திறக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தனியார் பேருந்துகள் (ஆம்னி பேருந்துகள்) மட்டும் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில்தான் இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும். மாநகர பகுதிகளுக்குள் வரக்கூடாது என ஆம்னி பேருந்துகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்துதான் இயக்க வேண்டும் என அமைச்சர் சிவசங்கரும் அறிவுறுத்தி இருந்தார்.
அதேவேளையில் பயணிகளின் நலன் கருதி ஆம்னி பேருந்துகளை சென்னை நகருக்குள் இருந்தே இயக்க அரசு அனுமதிக்க வேண்டும். ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு 90 நாட்களுக்கு முன்னதாக நடைபெற்றுள்ளதால் பயணம் தடைப்படாமல் இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.
இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்துதான் இயக்கப்பட்டு வருகிறது. தென்மாவட்டங்களில் இருந்து வரும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிற்குத்தான் வருகிறது.
நாளை தைப்பூசம், அதனைத் தொடர்ந்து குடியரசு நாள் என அடுத்தடுத்து விடுமுறை என்பதால் முன்பதிவு செய்த பயணிகள் அவதிப்பட வாய்ப்புள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடை விதிக்கப்பட்ட நிலையில் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில் அரசு நடவடிக்கை எடுக்குமா? என்பது பின்னர்தான் தெரியவரும்.