தமிழ்நாட்டில் கடந்த இரு தினங்களாக ஆம்னி பஸ்களை அதிகாரிகள் சோதனையிட்டதில் முறையான ஆவணம் இல்லாதது உள்பட பல்வேறு குற்றச்சாட்டின் பேரில் 120 பஸ்கள் பிடித்து வைக்கப்பட்டு உள்ளன. இந்த பஸ்களில் முறையான ஆவணங்கள் வைத்திருந்தும் சில பஸ்களை பிடித்து வைத்துள்ளதாகவும், இதனால் பஸ்களை விடுவிக்காவிட்டால் இன்று மாலை 6 மணி முதல் பஸ்களை இயக்க மாட்டோம் என்றும் ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆம்னி பஸ் சங்க தலைவர்களுடன் போனில் பேச்சுவர்த்தை நடத்தினார். போக்குவரத்து கழக அதிகாரிகளை சந்தித்து பேசி போராட்டத்தை கைவிடும்படி அவர்களிடம் எடுத்துக் கூறினார். அதன் பேரில் போக்குவரத்து துறை அதிகாரி சண்முகசுந்தரத்தைச் சந்தித்து ஆம்னி பஸ் சங்கத்தினர் பேசினார்கள்.
இதுகுறித்து அமைச்சர் சிவசங்கரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
ஆம்னி பஸ் சங்கத்தினருடன் நான் தொலைபேசியில் பேசினேன். அவர்கள் சில கோரிக்கையை சொல்லி உள்ளனர். குறிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்ட பஸ்களில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறினார்கள். தவறு இழைக்கும் பஸ் மீது நடவடிக்கை எடுப்பதில் எந்த கருத்து மாறுபாடும் இல்லை என்று தெரிவித்தனர். எனவே நான் அதிகாரிகளிடம் சொல்லி உள்ளேன். ஆகவே பிடித்து வைத்துள்ள பஸ்களை ஆய்வுசெய்து தவறு இல்லை என்றால் பஸ்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மற்ற பஸ்கள் நடவடிக்கைக்கு உட்படும். ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
அதேபோல் வெளிமாநில பதிவு பஸ்களை ஓட்டுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இப்போது பண்டிகை விடுமுறை காலமாக இருப்பதால் மக்களை பாதிக்காத வகையில் மேலும் கூடுதல் பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எப்படி இருந்தாலும் இந்த விஷயத்தில் ஆம்னி பஸ் சங்க நிர்வாகிகளுடன் அரசு அதிகாரிகள் பேசி ஒரு முடிவுக்கு வருவார்கள். எனவே பேச்சுவார்த்தையில் போராட்டம் வாபஸ் ஆகி விடும் என எதிர்பார்க்கிறேன்.
கூடுதல் கட்டணம் பிரச்சினை வராமல் இருப்பதற்காக தீபாவளி பண்டிகைக்கு முன்பாக கடந்த ஆண்டை போலவே ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். அதன்பிறகும் அவர்கள் ஏதும் தவறு செய்தால் அது குறித்து புகார் செய்வதற்கு தீபாவளிக்கு முன்பாக தொலைபேசி எண் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே ஆம்னி பஸ்களில் மற்றொரு சங்கமான தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க செயலாளர் மாறன் கூறுகையில், “ஆம்னி பஸ்கள் அனைத்தும் இயங்கும். பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்” என்று கூறினார்.
இந்நிலையில், தமிழ்நாடு ஆம்னி பஸ்கள் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் அனைத்து ஆம்னி பஸ் நிர்வாகிகளுடன் தமிழக அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. சென்னை கே.கே.நகரில் உள்ள அலுவலகத்தில் போக்குவரத்து துறை இணை ஆணையர் தலைமையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் வைத்த கோரிக்கைகளை அதிகாரிகள் கவனமுடன் பரிசீலித்தனர். அரசு தரப்பிலும் பல்வேறு நிபந்தனைகள் வைக்கப்பட்டன. இவைகள் அனைத்தும் பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஆம்னி பஸ் நிர்வாகிகள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.