தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. தேர்தலின் போது 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் அதிகாரிகள் தீவிர விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தேர்தலின் போது வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வசதியாக அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை வருவதாலும் அதன்பின்னர் சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் மற்றும் தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ளவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளனர்.
ஏற்கனவே சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் முடிந்த நிலையில் சிறப்பு ரெயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து இன்றும், நாளையும் 7 ஆயிரம் சிறப்பு அரசு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் ரூ.1,200 முதல் ரூ.2 ஆயிரம் வரை கட்டணம் தாறுமாறாக உயர்ந்து உள்ளது. திருநெல்வேலிக்கு ஏ.சி. வசதி உள்ள பஸ்களில் ரூ.2500 முதல் ரூ.3 ஆயிரம் வரை கட்டணம் உள்ளது. இதேபோல் கோவை, மதுரைக்கு ரூ. 2 ஆயிரம், திருச்சிக்கு ரூ.1500 முதல் ரூ.2 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ரெயில்களில் டிக்கெட் கிடைக்காத நிலையில் கடைசி நேரத்தில் பயணம் மேற்கொள்ளும் பெரும்பாலானவர்கள் விரைவான சொகுசு பயணம் என்பதால் கட்டண உயர்வை பற்றி கவலைப்படாமல் ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்து வருகிறார்கள். நாளை(வியாழக்கிழமை) சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு 1500 ஆம்னி பஸ்கள் வரை இயக்கப்பட உள்ளது.
இதில் 75 சதவீத டிக்கெட்டுகள் ஏற்கனவே முன்பதிவு மூலம் விற்று தீர்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. ஆம்னி பஸ்களில் கட்டண உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதற்கிடையே ஆம்னி பஸ் கட்டண உயர்வு குறித்து ஒருவர் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரின் சமூக வலைதள பக்கத்தில் புகார் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, பாராளுமன்ற தேர்தலின் போது சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக 7,154 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆம்னி பஸ்கட்டண உயர்வு குறித்து புகார் வந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.