ஆப்பிள் நிறுவனத்தின் நிகழ்வு புதிய சாதனங்கள் அறிமுகம்
ஆப்பிள் நிறுவனத்தின் ஹை ஸ்பீடு நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஐந்து புதிய சாதனங்களை அறிமுகம் செய்து உள்ளது. ஹோம்பாட் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கர், ஐபோன் 12 மினி, ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் என உள்ளிட்டவைகளை ஆப்பிள் அறிமுகம் செய்து இருக்கிறது.
புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் மற்றும் ஐபோன்களில் சக்திவாய்ந்த பிராசஸர், நீண்ட பேட்டரி பேக்கப் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.
ஆப்பிள் ஹோம்பாட் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கரில் ஆப்பிள் எஸ்5 பிராசஸர், சிரி தொழில்நுட்பம் கொண்டு இயங்குகிறது. இது வீடு முழுக்க தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை சீராக வழங்கும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 4 மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டுள்ளது.
இது ஹே சிரி சேவையின் அனுபவத்தை மேம்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள ஃபுல்-ரேன்ஜ் டிரைவரினை ஆப்பிள் பிரத்யேகமாக டியூன் செய்து விசேஷ வேவ்-கைடு வழங்குகிறது. இது 360 டிகிரி ஆடியோ வசதியை வழங்குகிறது.
இத்துடன் ஃபோர்ஸ்-கேன்சலிங் பேசிவ் ரேடியேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. ஹோம்பாட் மினி ஸ்பீக்கரில் பிரத்யேகமாக மூன்று மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு ஹோம்பாட் மினி ஸ்பீக்கர்களை ஒருங்கிணைத்து ஸ்டீரியோ அனுபவத்தை வழங்குகிறது.
ஆப்பிள் ஹோம்பாட் மினி வைட் மற்றும் ஸ்பேஸ் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 9900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை நவம்பர் 16 ஆம் தேதி துவங்க இருக்கிறது.
புதிய ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 மாடல்களில் ஆப்பிள் ஏ14 பயோனிக் பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. இவற்றில் முறையே 5.4 இன்ச் மற்றும் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இரு மாடல்களிலும் முதல் முறையாக 5ஜி வசதி வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 12 எம்பி வைடு கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இது குறைந்த வெளிச்சத்திலும் தெளிவான புகைப்படங்களை வழங்குகிறது. இத்துடன் ட்ரூ டெப்த் செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் ஐபோன் 12 மினி 64ஜிபி மாடல் விலை ரூ. 69,900, 128 ஜிபி மாடல் விலை ரூ. 74,900, 256 ஜிபி மாடல் விலை ரூ. 84,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 12 64 ஜிபி மாடல் விலை ரூ. 79,900, 128 ஜிபி ரூ. 84,900 மற்றும் 256 ஜிபி மாடல் ரூ. 94,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றின் விற்பனை நவம்பர் 13 ஆம் தேதி துவங்குகிறது.
ஐபோன் 12 ப்ரோ மற்றும் 12 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் 6.1 இன்ச் மற்றும் 6.7 இன்ச் OLED சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேக்கள், செராமிக் ஷீல்டு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இரு மாடல்களிலும் ஆப்பிள் ஏ14 பயோனிக் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கின்றன.
புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 12 எம்பி டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 12 ப்ரோ மாடலில் ஹெச்டிஆர் வீடியோ மற்றும் டால்பி விஷன் வசதி வழங்கப்பட்டுள்ளன. இது ஸ்மார்ட்போன்களில் முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன் லிடார் ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. இது அதிக துல்லியமான ஏஆர் அனுபவங்களை வழங்குவதோடு, குறைந்த வெளிச்சங்களிலும் அதிக துல்லியமான புகைப்படங்களை எடுக்க வழிவகை செய்யும்.
இந்தியாவில் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 128 ஜிபி மாடல் விலை ரூ. 129900 என்றும் 256 ஜிபி மாடல் ரூ. 139900 என்றும் 512 ஜிபி மாடல் விலை ரூ. 159900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை நவம்பர் 13 ஆம் தேதி துவங்குகிறது.