Tamilசெய்திகள்

ஆப்கானிஸ்தானுக்கு 50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை அனுப்பும் இந்தியா

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்த நாட்டுக்கு சர்வதேச நாடுகள் உதவி செய்ய மறுத்து வருகின்றன.

மேலும் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட வறட்சிகளினாலும், உள்நாட்டுப் போரினாலும் உணவு தானியங்களின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானில் நாளுக்கு நாள் உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு பன்னாட்டு அமைப்புகளும், வளர்ந்த நாடுகளும் அளித்து வந்த நிதி உதவியை நிறுத்தி விட்டதால் கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் ஆப்கானிஸ்தான் சிக்கி தவித்து வருகிறது.

உணவு தேவைகளை பூர்த்தி செய்ய கடந்த 10 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா கோதுமை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 75 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை நன்கொடையாக ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது.

ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு உதவிகளை அனுப்புவது பெரும் சவாலாக உள்ளது. கோதுமையை பாகிஸ்தானின் அதாரி-வாகா எல்லை வழியாக அனுப்ப பாகிஸ்தான் அனுமதிக்க மறுப்பதால் கப்பலில் சாபஹார் துறை முகம் வழியாக ஈரானுக்கு அனுப்பப்பட்டு பின் ஆப்கானிஸ்தானுக்கு சாலை மார்க்கமாக அனுப்பப்பட்டது.

இதற்கிடையே கடந்த மாதம் நடைபெற்ற ஐ.நா. சபை கூட்டத்தில் இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தானிற்கு கோதுமை வழங்குவது குறித்து இந்திய அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமானம் அடிப்படையில் உதவுபவர்களுக்கு தடையற்ற மற்றும் நேரடி அணுகுமுறையை இந்தியா விரும்புகிறது என்றும், இந்த உதவிகள் அனைத்தும் ஆப்கானிஸ்தான் சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் பாகுபாடின்றி போய் சேர வேண்டும் என்றும் வெளியுறவு விவகாரத்துறை மந்திரி எஸ்.ஜெயசங்கர் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள உணவு பொருட்களின் நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்தியா 50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக அனுப்ப திட்டமிட்டுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, “தலிபானுடனான இந்தியாவின் உறவை பொருட்படுத்தாமல் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தடையற்ற மற்றும் மனிதாபிமான உதவி செய்யப்படும், ஆப்கானிஸ்தான் மக்களுடனான பாரம்பரிய நட்பு உறவு மற்றும் அணுகுமுறையை தொடர்ந்து சுமூகமாக வழிநடத்தும்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.