ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் நேற்று முன்தினம் இரவு முழுமையாக வெளியேறியது. 20 ஆண்டு கால போர் முடிவுக்கு வந்ததாக அமெரிக்கா முறைப்படி அறிவித்தது.
அமெரிக்காவின் கடைசி விமானம் காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றதும் தலிபான் பயங்கரவாதிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதனிடையே அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறியதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு முழு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக தலிபான்கள் அறிவித்தனர்.
இதுகுறித்து தலிபான் பயங்கரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபிபஹுல்லா முஜாஹித் கூறுகையில் ‘‘அமெரிக்க வீரர்கள் காபூல் விமான நிலையத்தை விட்டு சென்று விட்டனர். நமது நாடு முழு சுதந்திரம் அடைந்துவிட்டது’’ என கூறினார்.
காபூல் விமானநிலையத்தில் இருந்த தலிபான் வீரர் ஹேமந்த் ஷெர்சாத் என்பவர் இது பற்றி கூறுகையில் ‘காபூலில் இருந்து அமெரிக்காவின் கடைசி 5 விமானங்களும் வெளியேறிவிட்டன. என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. 20 ஆண்டுகள் தியாகத்துக்கு பலன் கிடைத்துவிட்டது’ என்றார்.