ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டி – இலங்கை வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது. அடுத்து நடைபெறும் ஒருநாள் தொடரில் இலங்கை அணி 2-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பல்லேகலேவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 48.2 ஒவர்களில் 266 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரஹ்மத் 65 ரன், ஓமர்சாய் 54 ரன் எடுத்தனர். குர்பாஸ் 48 ரன்னிலும், அலிகில் 32 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து, 267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் பதும் நிசங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ இருவரும் அதிரடியாக ஆடினர். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 173 ரன்கள் சேர்த்த நிலையில், அவிஷ்கா பெர்னாண்டோ 91 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய பதும் நிசங்கா சதமடித்து அசத்தினார். அவர் 118 ரன்னில் அவுட்டானார். குசால் மெண்டிஸ் 40 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இலங்கை அணி ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தானை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது.

ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பதும் நிசங்காவுக்கு அளிக்கப்பட்டது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports