Tamilவிளையாட்டு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வி – பாபர் அசாமை கேப்டன் பதவியில் இருந்து நீக்க பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பரிந்துரை

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியின் நிலைமை மோசமாக இருக்கிறது. முதல் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்ற அந்த அணி, தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோற்றது.

சென்னையில் கடந்த 23 ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் முதல் முறையாக தோல்வியை தழுவியது. இந்தத் தோல்வியால் எஞ்சிய 4 ஆட்டங்களில் வெற்றி பெறவேண்டிய கட்டாயம் பாகிஸ்தானுக்கு உள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 282 ரன் குவித்தும் தோற்றது அந்த அணிக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. மோசமான பந்து வீச்சு, பீல்டிங் இதற்கு காரணமாக அமைந்தது.

இந்நிலையில், இந்த தோல்வியால் கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாமை நீக்க வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:-

வாசிம் அக்ரம்:

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பாகிஸ்தான் வீரர்கள் பீல்டிங் செய்த விதம் மிகவும் மோசமாக இருந்தது. 282 ரன் என்பது நல்ல ஸ்கோராகும். பந்துவீச்சு மிகவும் சராசரியாகவே இருந்தது. கடந்த ஒரு ஆண்டாகவே பாகிஸ்தான் வீரர்களுக்கு உடல் தகுதி தேர்வு மேற்கொள்ளவில்லை. நவீன கிரிக்கெட் உலகில் நீங்கள் முழு உடல் தகுதியுடன் இல்லையென்றால் கேட்ச் பிடிப்பது எப்படி? பவுண்டரியை எப்படி தடுக்க முடியும்?

அக்யூப் ஜாவித்:

பாபர் அசாமை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவேண்டும். அவருக்கு பதிலாக ஷகின் ஷா அப்ரிடியை டி 20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான பாகிஸ்தான் கேப்டனாக நியமிக்க வேண்டும். அணியின் எதிர்காலத்துக்கு இது நல்லது. பாபர் அசாம் தன்னை ஒரு சிறந்த கேப்டனாக நிரூபிக்க தவறிவிட்டார்.

மிஸ்பா-உல்-ஹக்:

பாபர் அசாசம் அணியை வழிநடத்துவது மிகவும் சாதாரணமாக இருந்தது. அவரின் பீல்டிங் வியூகம், பந்து வீச்சாளர்களுக்கு அவர் கொடுக்கும் விதம் ஏதோ புதிதாக கேப்டன் பதவியில் இருப்பவர் மேற்கொள்வது போல் இருந்தது. ஹாரிஸ் ரவூப்புக்கு பவர் பிளேயில் பந்துவீச கொடுத்ததால் ஒரு சில பவுண்டரிகளால் அவரது நம்பிக்கை உடைந்துவிட்டது. இதுவும் தவறான முடிவாகும்.

ரமீஸ் ராஜா, ரஷீத் லத்தீப், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், சோயிப் அக்தர், மொயின்கான் உள்ளிட்ட முன்னாள் வீரர்களும் பாகிஸ்தான் அணியின் மோசமான ஆட்டத்தையும், கேப்டன் பாபர் அசாமையும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.