ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் – இந்தியா கண்டனம்
ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் வெளியுறவுத்துறை அலுவலகம் அருகே நேற்று முன்தினம் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததில் 5 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்று நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அமைச்சகரகத்தில் இருந்து முக்கிய அதிகாரிகள் வெளியேறும்போது அலுவலக வாசலில், இருந்த தற்கொலை படை பயங்கரவாதி கெய்பர் அல் காந்தகாரி இந்த தாக்குதலை நடத்தியதாக அவர்கள் கூறியுள்ளனர். இதற்கு ஆளும் தலிபான் அதிகாரிகள் உடனடியாக எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக இந்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், பல அப்பாவி பொதுமக்களின் உயிர்களை பலிவாங்கிய மற்றும் பலரை காயப்படுத்திய காபூலில் நேற்றைய பயங்கரவாத தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம் என தெரிவித்துள்ளார்.